Header Ads Widget

அரியதுறை - அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில்




 maragathavalli sametha varamoortheeswarar

 முன்னொரு காலத்தில் ரோம மகரிஷி பிரம்மலோகம் சென்று பிரம்மனிடம் ‘சுவாமி எனக்கு வயதாகிவிட்டதால் சீக்கிரமே சிவ தரிசனம் கிட்ட ஏதுவாக தவம் செய்ய நல்ல இடம் ஒன்றைக் காட்டுங்கள்’ என்று வேண்டினார். உடனே பிரம்மா, அருகிலிருந்து தர்ப்பையை எடுத்து அதைப் பந்து போல உருட்டி பூலோகம் நோக்கி வீசியெறிந்தார். அது பிரம்மாரண்ய நதிக்கரையில் விழுந்தது. அதுதான் இப்போது அரியதுறை என உள்ளது. ரோம முனிவர் அங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தவம் செய்தார். சிறிது காலத்திலேயே சிவனும் பார்வதியும் முனிவருக்கு காட்சி தந்து வரமளித்தார்கள். ரோம முனிவர் நிர்மாணித்த சிவலிங்கம் தான் இன்று வரமூர்த்தீஸ்வரராக நமக்கு அருள்பாலிக்கிறார்.

கோவிலின் பக்கத்தில் ஆரணி ஆறு வறண்டு போய் முள் காடாக இருந்தாலும், அந்த ஆற்றங்கரையில் சிறிய கிணறு மாதிரி ஒன்று இருக்கிறது. அதில் யாரும் இறைக்காமலே தண்ணீர் ஊற்றப்படுகிறது. அதுவும் சுத்தமான நீர். கங்கை நீரை விட புனிதமான நீர்!

முன் காலத்தில் தென்னக கோவில்களை தரிசித்து விட்டு காசி நோக்கிச் சென்று கொண்டிருந்தார் முகுந்த முனிவர். சதி அனுசூயாவுக்கும் அத்திரி முனிவருக்கும் பிறந்த இவர் அரியதுறைக்கு வந்தார். அவரை வரவேற்ற ரோம மகரிஷியிடம் தான் காசிக்குச் செல்வதாகக் கூறினார். அவரோ, “இதற்கு ஏன் நீங்கள் அவ்வளவு சிரமப்பட வேண்டும். காசியை விட புண்ணியமானது இந்த ஊர். ஆற்றில் நீராடி வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் அவரே நேரடியாகக் காட்சி தருவார்” என்று கூறினார். அவர் சொல்படியே முகுந்தரும் ஆற்றில் நீராடி, இறைவனை வழிபட்டார்.

ariyathurai varamoortheeswarar temple kodimaram

ரோமருக்காவது கொஞ்சம் காலம் கழித்து காட்சியளித்த இறைவன் முகுந்த முனிவருக்கு உடனடியாக காட்சியளித்தார். அதுவும் காசியில் அருள்பாலிக்கும் கால பைரவர் உருவத்தில். அவரது தலைச் சடையிலிருந்து நீர் சொட்டி, அது பிரம்மாரண்யத்தில் (தற்போது ஆரணி ஆறு) கலந்தது. காலபைரவரே அரிய கங்கை நீரை காசியிலிருந்து இங்கு கொண்டு வந்ததால் இந்த ஊருக்கு அரியதுறை என்ற பெயர் ஏற்பட்டது. காலபைரவரின் தலையில் இருந்து கசிந்த கங்கை நீரே இன்றைக்கும் ஆற்றங்கரையிலிருந்து ஊற்றாகச் சுரந்து ஆற்றில் கலக்கிறது. கங்கை நீரை கடவுளே இங்கே கொண்டு வந்ததால் வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் பித்ருதோஷம் எனப்படும் முன்னோர்கள் செய்த பிழைகள் எல்லாம் மன்னிக்கப்படும். அந்த காலத்தில் மண்ணால் செய்யப்பட்ட காலபைரவர் சிலை இன்றும் இங்கே காணக் கிடைக்கிறது.

கிருஷ்ண பரமாத்மா பூலோகம் கிளம்பும் போது தேவேந்திரன் கொடுத்த பரிசுகளுள் ஒன்று பாரிஜாத மரம். அம்மரத்தின் சிறப்புகளை பாமா, ருக்மணி இருவரிடமும் எடுத்துச் சொல்லி அவர்களிருவரையும் அம்மரத்தை கண்ணனிடமிருந்து கேட்டுப் பெறுமாறு நாரதர் தனித்தனியே அவர்களிடம் பேசி சிந்து முடிந்தது. ஆனால் கிருஷ்ணரோ பாமா, ருக்மணி இருவரையும் ஆளுக்கு ஒரு மாதம் பாரிஜாத மரத்தை வைத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டார். ஆனால் இதை அறிந்த பாரிஜாத மலர் மிகவும் கோபமுற்று, ‘கிருஷ்ணா என் போன்ற மரத்தின் ஆசை உனக்கு எங்கே புரியும். எனவே நீயும் ஆயிரம் ஆண்டுகள் அரசமரமாக இருந்து பார்’ என்று சாபமிட்டுவிட்டது. அதனால் கிருஷ்ண பரமாத்மா ஆயிரம் ஆண்டுகள் இந்த அரியதுறையில் அரசமரமாக இறந்தார். அவரே இன்றைக்கும் மரமாக இருப்பதாக ஐதிகம். இம்மரத்தடியில் ரோம மகரிஷியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


ஒரு சமயம் முன்னோர் செய்த பாவத்தால் பிறந்த ஒரு குரங்கை வேட்டைக்காரன் ஒருவன் துரத்த, அது பயந்து போய் அரச மரத்தைச் சுற்றி ஓடி, பின்னர் களைப்பில் அங்கிருந்த கங்கை நீரையும் கொஞ்சம் குடித்து, கோவிலுக்குள் ஓடி வரமூர்த்தீஸ்வரர் முன் அடைக்கலம் அடைந்தார். இதனால் அதன் பித்ரு தோஷம் மறைந்தது. மறு ஜென்மத்தில் அது காஞ்சி மன்னனாகப் பிறந்து, பூர்வ roma maharishi in varamoortheeswarar templeஜன்ம ஞாபகத்தால் மண் கோவிலாக இருந்த இக்கோவிலை கற்கோவிலாக எழுப்பியதாக ஆலய வரலாறு சொல்கிறது.

இந்திரனுக்கும் விருத்ராசுரனுக்கும் நீண்ட நாளாக யுத்தம் நடந்தது. முடிவில் இந்திரன் விருத்ராசுரனைக் கொன்று உடலைத் தூக்கி வீசி எறிந்தான். அவ்வுடல் கடும் தவம் புரிந்து கொண்டிருந்த அகத்திய முனிவரின் தலை மீது விழுந்ததால் முனிவரின் தவம் கலைந்தது. இதனால் கோபம் கொண்ட அகத்தியர் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க சாபமிட்டார். தன் தவறை உணர்ந்த இந்திரன் முனிவரை வணங்கி சாபவிமோசனம் கேட்டான். மனமிறங்கிய முனிவர் இந்திரனிடம் அரியதுறை வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் சாபம் நீங்கும் என்று கூறினார். அவ்வாறே இந்திரன் பிரதி வருடம் மார்கழி மாதம் அமாவாசை கழிந்த அஷ்டமி திதியில் வரமூர்த்தீஸ்வரரை வணங்கி சாப விமோசனம் பெற்றார்.

திருவொற்றியூரை ஆண்ட சித்திர சேன மகாராஜா ஒரு நாள் வேட்டையாட காட்டுக்குச் சென்றார். அங்கே ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது அழகான பெண் குழந்தை ஒன்று இருந்தது. குழந்தை இல்லாத தனக்கு இறைவன் அளித்த வரமாக எண்ணி அக்குழந்தைக்கு மரகதவல்லி எனப்பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தார். அக்குழந்தை வளர்ந்து திருமண வயதை அடைந்ததும், சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். அப்போது வரமூர்த்தீஸ்வரர் வேடம் கொண்டு மரகதவல்லியை தூக்கி வந்துவிட, ராஜாவும் தன் படையுடன் பின் தொடர்ந்து விரட்டி வந்தார். இவ்வூரில் இறைவன் திருமணக்கோலத்தில் அவர்களுக்கு காட்சியளித்தான். ஆதலால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வணங்கினால் திருமணம் கைகூடும்.

 

கோவில் அமைப்பு


ஆலய கோபுரத்தில் மீசை வைத்த சிவன், பார்வதி மற்றும் விநாயகருடன் காட்சியளிக்கிறார். உள்ளே, விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சந்நிதிகள் உள்ளனர். மண்ணால் செய்யப்பட்ட காலபைரவர் தனிச்சந்நிதியில் காட்சியளிக்கிறார். (எண்ணெய் சாத்திச் சாத்தி கருங்கல் சிலை போல் உள்ளது.) மரகதவல்லி தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். கருவறையில் சதுர பீடத்தில் வரமூர்த்தீஸ்வரர் காட்சி தருகிறார். சிவன் பார்வதி திருமணக்கோலத்தில் தனியே காட்சியளிக்கிறார்.

கருவறையின் பின்புறம் பாலசுப்பிரமணியரும், கிழக்கே கொடிமரம், பலிபீடம், எளிய வடிவில் நந்திதேவர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

 

இதன் வலதுபுறம் சுயம்பு பைரவர் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார்.

இந்த கோவிலில் நவக்கிரஹங்கள் இல்லை. ஆனால் சூரியனும், சந்திரனும் கோவில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளனர். கோவிலின் மேல் கூரையில் பாம்புகள் செதுக்கப்பட்டுள்ளன. இது இக்கோவிலில் வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷத்தை நிவர்த்தி செய்வதைக் குறிக்கிறது.

இங்கு வரும் பக்தர்கள் ஊற்றெடுக்கும் கங்கை நீரை அருந்தி, கிருஷண அரச மரத்தை சுற்றி வந்து, பின் வரமூர்த்தீஸ்வரரை உள்ளன்புடன் வணங்கினால், வாழ்வில் வளம் பெறுவர், பித்ரு தோஷம் நீங்கும், திருமணத்தடைகள் நீங்கும்.

Post a Comment

0 Comments